நான் பார்த்த நம்பி மலை
சில வருடங்களாகவே திருக்குறுங்குடி அருகில் மலை மீது வீற்றிருக்கும் அருள்மிகு அழகிய நம்பியை தரிசனம் செய்ய நினைத்துகொண்டிருக்கும் நேரத்தில், எதிர்பாராதவிதமாக சென்ற வாரம் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது . நானும் எனது நண்பர்கள் இருவருடன் எனது மகிழ்வுந்தில் கோவில்பட்டியிலிருந்து காலை 0830 மணிக்கு கிளம்பினோம். நான் எப்போதும் போல் எனது Shirt Pocket ஐ கவனியாது கிளம்பியாயிற்று. மகிழ்வுந்தில் 5 கிலோ மீட்டர் கடந்த பின்தான் பெட்ரோல் level பார்த்ததில் , சென்ற தினம் அலுவலக Camp சென்ற விதத்தில் 90 சதவீத பெட்ரோல் உபயோகித்துவிட்டதை காட்டியது. சரி, பெட்ரோல் fill செய்ய bulk சென்ற பின்தான் Shirt Pocket ஐ கவனித்தேன், ரூபாய் 500 மட்டும்தான் இருந்தது. நண்பரும் சொன்னார், என்னிடம் ஒரு 500 ரூபாய் இருக்கிறது. முதலில் பெட்ரோல் ரூபாய் 1000 க்கு fill செய்வோம். பின்னர் தேவை எனில் என்னிடம் ATM கார்டு இருக்கிறது, உபயோகித்துகொள்வோம் என்றார் ஒரு நண்பர். (நான் இதுவரை எனக்கென்று ATM கார்டு வாங்கியதில்லை).
சரி எல்லாம் ஸ்ரீ அழகிய நம்பியின் பொறுப்பு என்று மனதில் நினைத்துக்கொண்டு , அங்கிருந்து கிளம்பினோம்.
எதோ வெளிநாட்டில் உள்ளதுபோல் அமைக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை (NH -7) -ல் மகிழ்வுந்து பறந்து ஏர்வாடி வரை வந்ததும், காலையில் யாரும் சாப்பிடவில்லை என்பதை பசி வந்து நினைவூட்டியது. ஏர்வாடியில் விசாரித்ததில் சைவ உணவகம் ஏதும் கிடையாது என்றும், ஒரே ஒரு சிறிய பெட்டிகடையில் மட்டுமே சைவ உணவு கிடைக்கும் என்றும, அதுவும் ஊர் எல்லையில் திருக்குறுங்குடி செல்லும் வழியில் உள்ளதாக தெரிவித்தனர். என் நண்பரும் ஏர்வாடியில் உள்ள ஒரு பேங்க்-ல் ATM கார்டு கொண்டு ரூபாய் எடுத்துகொண்டார்.
அந்த சிறிய பெட்டிக்கடையை செல்லும் வழியில் கண்டு, அங்கு சிறிய அளவில் ஆனால் சுவையாக காலை உணவினை முடித்துக்கொண்டோம். சாப்பிட்டு முடித்த பின்னர்தான் கவனித்தோம் கடையின் பெயரை, "சலீம் சைவ உணவகம்" . அப்பொழுது ஞாபகம் வந்தது, நம்முடன் எப்போதும் இருந்து வழிநடத்தும் ஸ்ரீ சீரடி சாய்பாபா வின் "எம்மதமும் சம்மதம் என நினைப்போருக்கு ஒரு குறையும் இருக்காது" என்ற கூற்று.
ஏர்வாடியில் இருந்து திருக்குறுங்குடி சென்று அங்கிருந்து மலை செல்ல பிரிவில் நுழையும் போதே வீசும் காற்றினை அனுபவித்தால்தான் அருமை புரியும். மகிழ்வுந்தினை அடிவாரத்தினில் நிறுத்தி விட்டு மலை மீது ஏற ஆரம்பித்தோம்.
அப்போது சரியாக மணி 1130. செல்லும் வழி இரு புறமும் பசுமை, பசுமை,
பசுமையை தவிர வேறதுவும் இல்லை. இடது புறம் ஓடும் ஆற்றின் சல சல எனும் ஓசை. அங்கங்கே கேட்கும் பறவைகளின் ரம்மியமான சப்தங்கள். பகல் 11 மணிக்கு மேலும் வெயில் அடிக்கிறதா என சந்தேகம் கொள்ள வைக்கும் ஒரு குளிர்ச்சியான சூழல் என மிக அற்புதமான மலையினை ஏறிக் கடந்து , கோவிலிருக்கும் இடத்தினை 1230 க்கு அடைந்தோம்.
நடை மாலை 4 மணிக்குத்தான் திறக்கும் என்பதால், புனிதமான நம்பியாறினில் குளிக்கலாம் என இன்னும் மேலே ஏறினோம். சிறிது தண்ணீர் குறைவாக இருக்கிறது என காட்டிலாகாவினர் கூறினர். எனவே துணிந்து மேலே உள்ள தடாகம் போன்ற உள்ள இடத்திற்கு சென்றோம். மந்திகளை அங்கே அதிகமாக காண முடிந்தது. அடிவாரத்திலிருந்து மலை
மீது சுமார் ஒரு மணி நேரமாக நடந்து வந்ததில், உடம்பில் இருந்த அனைத்து வேண்டா நீரும், வேர்வையாக வெளிவந்தில் மிக களைப்பாக இருந்தது. ஆனால் அந்த களைப்பெல்லாம் புனிதமான நம்பியாரின் தடாகத்தில் குளிர்ச்சியான நீரினில் ஒரு முறை முங்கி எழுந்ததில் காணாமற்போனது. அவ்வளவு ஒரு ஜில்லென்ற குளிர்ச்சி, குளிக்க குளிக்க அப்படியொரு Freshness. நேரம் சென்றதே தெரியவில்லை.
தடாகத்தில் குளிக்கும் பொது ஒரு மந்தி கூட்டமாக வந்து நாங்கள் வாங்கி வைத்திருந்த வாழைப் பழங்களை அப்படியே அள்ளி சென்றது. பின்னர்
நல்ல ஒரு இயற்கை சூழலில் , அந்த தடாகத்தின் மேலே சென்று ஆற்றின் நடுவே அமைந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்து நண்பர் கொண்டு வந்திருந்த புளியோதரையினையும், கீழ ஈரால் சேவினையும் சாப்பிட்டோம். அந்த சூழலை மறக்கவே முடியாது. அமர்ந்திருந்த பாறையை சுற்றிலும் ஓடும் நம்பியாறு, ஆற்றினில் துள்ளி நீந்தும் மீன்கள், இது வரை பார்த்திராத வண்ணங்களில் பறக்கும் தட்டாம்பூச்சிகள், வால் குருவி போன்றதொரு தோற்றம் கொண்ட பறவைகளின் ரீங்காரங்கள் என, பகல் 0230 மணியிலும் எதோ AC ரூமில் இருப்பது போன்றதொரு சூழலில் அமர்ந்து சாப்பிட்ட அனுபவம் எந்த ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றாலும் கிடைக்காது.
பின்னர் அங்கிருந்து இறங்கி, கோவிலுக்கு வந்தோம். அன்று 0400 மணிக்கு சிறப்பு பூஜை ஒன்றிற்கு ஒரு சேவா அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் அருள்மிகு ஸ்ரீ அழகிய நம்பியினை சிறப்பு பூஜையின் போது தரிசிக்கும் வாய்ப்பு எளியவனாகிய எனக்கும் கிடைத்தது. பல வருடங்களாக இருந்த அவாவினை அறிந்த திரு அழகிய நம்பி, தான் இருக்கும் இடத்தின் பெருமைகளை உணர்த்த மலை மீது சென்று , நீராட வைத்து, இயற்கை சூழலினை அனுபவிக்க வைத்து , நிகரில்லாத அழகிய தரிசனமும் தந்தார். சரி, இதுவே இப்போது போதும்
என்று நினைத்து கோவிலினை ஒரு முறை வலம் வந்து விடை பெறலாம் என நினைத்த பொழுது, சிறப்பு பூஜை செய்த அந்த சேவா அமைப்பினர் வலுக்கட்டாயமாக எங்களை அழைத்து சுவையான மதிய உணவினை
கோவில் பிரகராத்தில் அமர வைத்து பரிமாறி உணவளித்தனர். திரு அழகிய நம்பியின் கருணையினை அப்போதுதான் முழுமையாக உணர்ந்தேன். மனதில் நினைந்து உருகி வேண்டினால் அவன் உடனே அருள்வான் என்பது எவ்வளவு உண்மை? சன்னிதானம் வெளியே வரும்போது நான் நினைத்தேன், "நம்மிடம் ரூபாய் எதுவும் இல்லையே,
இருந்ததையும் மகிழ்வுந்தில் பெட்ரோலுக்கு செலவளித்து விட்டோம் , செல்லும் வழியில் எப்படியும் பசிக்கும், சாப்பிட வேண்டும், திரும்பி செல்ல குறைந்தது 3 மணி நேரம் ஆகும், என்ன செய்ய ?" என்று. வெளியே வந்து ஒரு அடிதான் எடுத்து வைத்திருப்போம், அந்த சேவா அமைப்பினர் கையை பிடித்து சென்று உணவளிக்க அழைத்து சென்றனர்.
கீழிறங்கி செல்கையில் சங்கிலி பூதத்தாழ்வாரிணையும் வணங்கி இறங்கினோம். இப்பொழுது இறங்கும் வழி எங்கும் மந்திகளின் கூட்டம் நிறைந்திருந்தது. சில நாம் நமது பக்கங்களில் பார்த்திராத வகையில்
இருந்தது. அவைகளில் கருங்குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவையும் அடங்கும். அங்கங்கே நாங்கள் கண்டவற்றை செல் போன் கேமரா (Samsung GT322 ) மூலம் பதிவு செய்தோம்.
நல்ல அரியதொரு மலை மீது ஏறி உடனுக்குடன் அருள் செய்யும் ஸ்ரீ அழகிய நம்பியினை தரிசனம் செய்து ஒரு மன நிறைவோடு வீடு வந்து சேர்ந்தோம்.
அடுத்த முறை செல்லும் பொழுது கட்டாயம் டிஜிட்டல் கேமரா கொண்டு செல்ல வேண்டும்.
வீட்டிற்கு வந்து கோவில் பிரசாதங்கள் கொடுக்கும் பொழுதுதான், எனது மாமனார் திரு தேவர்பிரான் அவர்கள், கோபித்துகொண்டார்கள், "ஏன் தன்னை அழைக்கவில்லை என்று". ஆனால் அவர்களுக்குத் தெரியாது நான் அவர்களை அழைத்து செல்ல விரும்பியதும், என் மனைவி "வேண்டாம் , அவர்கள் சிறு பிள்ளை போல் மலை, ஆறினைக் கண்டதும் மாறி விடுவார்கள், மற்றும் உடல் நிலை ஒத்துப் போக வேண்டும்" எனக் கூறி அழைப்பிற்கு ஒரு "ban ஆர்டர்" போட்டதும்.
நான் நினைத்துக்கொண்டேன் "அவனை நம்பி வருவோரின் உடல் நிலையினை அந்த நம்பி பார்த்துக் கொள்வான் " ஏனெனில் எனக்கு நீண்ட நாட்களை இருந்த ஒருசில உடல் உபாதைகள் நம்பி மலை சென்று வந்த சில நாட்களில் பறந்தோடி விட்டது.
எனது வேண்டுகோள்: இந்த அற்புதமான நம்பி கோவிலைப்பற்றி ஸ்தல வரலாறு போன்ற செய்திகளை யாரேனும் வழங்க முன்வர வேண்டும். மலை நுழை வாயினில் சிவவாக்கிய சித்தரின் சிலை ஒன்று உள்ளது. எனவே பல சித்தர்களுக்கும் இந்த மலைக்கும் கட்டாயம் தொடர்பிருக்கும்.
பார்ப்போம், நம்பி யார் மூலமாவது இந்த தகவல்களை தருவாரா என்று..
நன்றி.
நெல்லையப்பன்
Very good narration! It has taken me to the "Nambi Hills". I have been wanting to vist the place; but couldn't make it till date. May the Lord 'Nambi' facilitate his Dharsan to me next time when i come over there! (incidentally, i am also by name 'Nambi' - Rajakumar ).
ReplyDeleteWith wishes.
Rajakumar Mumbai
நல்ல தகவல் பகிர்ந்தீர்கள் ,திருக்கோவில் எப்போதெல்லாம் திறந்திருக்கும் .எங்கிருந்து எங்கு வந்து திருக்கோவில் தரிசிப்பது ? விலங்குகள் உண்டா? சிறப்பு பூஜை எப்போது ,திருக்கோவில் அமைப்பு வரும் வழி !இதற்கு பதில்களை இணைத்தால் முழுமை பெறும்.
ReplyDelete